

கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். இருப்பினும், புதிய அமைச்சரவையில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் காங்கிரஸின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற முதல்வர் டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கட்சியில் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெறுவது சாத்தியமற்றது. கடந்த காலத்தில் சித்தராமையாவின் அமைச்சரவையில் எனக்கும் கூட அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஆனால், அதற்குப் பிறகு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? அதேபோலத் தான், இப்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் எதிர்காலத்தில் நிச்சயம் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
டி.கே. சிவகுமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 19 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த இண்டி தொகுதி எம்.எல்.ஏ யஷவந்தராயகவுடா பாட்டீல் மற்றும் சாகர் தொகுதி எம்.எல்.ஏ பேலூர் கோபாலகிருஷ்ணா ஆகிய இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர்களான டி.பி.ஜெயச்சந்திரா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டி.பி. ஜெயச்சந்திராவின் இல்லத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையிலும் ஈடுபட்டனர்.
இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் எம்.எல்.சி காயத்ரி சாந்தேகவுடா பதவியேற்காததால், விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ.க்களின் வெளிப்படையான எதிர்ப்பும் ராஜினாமாவும் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், அதிருப்தியில் உள்ள தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும், வாரியப் பதவிகள் மற்றும் பிற பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்தவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.