5 ஆண்டுகால விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்திலேயே ஆவணங்களை கிழித்தெறிந்து கணவருடன் சேர்ந்த மனைவி!

கண்களில் கண்ணீருடன் ஷிகாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார்.
கணவருடன் சேர்ந்த மனைவி
கணவருடன் சேர்ந்த மனைவி
Published on

டெல்லியை சேர்ந்த சௌரப் மற்றும் ஷிகா ஆகிய இருவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விவாகரத்து

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக உறவில் விரிசல் விழுந்தது.

இதனால், இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு பல்வேறு வாய்தாக்கள் என நீண்டு கொண்டே சென்றது.

ஆண்டுக் கணக்கில் நீடித்த இந்த சட்டப் போராட்டம், ஷிகாவின் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதித்தது.

மாரடைப்பு

ஷிகாவின் தந்தை தனது வாழ்நாள் சேமிப்பின் பெரும்பகுதியை இந்த நீதிமன்ற செலவுகளுக்காகவே இழந்து தவித்தார். இந்த அதீத மன உளைச்சல் காரணமாக, அண்மையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உதவி

போதிய பண வசதி இல்லாததால், அவர் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட கணவர் சௌரப், கடந்த காலக் கசப்புகளை மறந்து உடனடியாக ஓடிவந்து உதவினார்.

தனது மாமனாரை குருகிராமில் உள்ள ஒரு அதிநவீன தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய நேரத்தில் சிறந்த சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தார். சௌரப்பின் முயற்சியால் ஷிகாவின் தந்தை உயிர்பிழைத்தார்.

இறுதி விசாரணை

இந்தச் சம்பவத்திற்கு பிறகு, விவாகரத்து வழக்கின் இறுதி விசாரணைக்காகச் சௌரப் மற்றும் ஷிகா ஆகிய இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் நேருக்கு நேர் ஆஜராகினர்.

வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கமான வாதங்களைத் தொடங்க ஆயத்தமாகினர்.

அப்போது இருவரின் முகபாவனைகளையும் கவனித்த குடும்ப நீதிமன்ற நீதிபதி, கணவர் சௌரபைப் பார்த்து, "உங்களுக்கு இப்போதும் இந்த விவாகரத்து வேண்டுமா?" என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.

மனமாற்றம்

அதற்கு சௌரப் எந்தப் பதிலும் கூறாமல், கண்களில் கண்ணீருடன் ஷிகாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தார்.

அந்த ஒரே ஒரு புன்னகையில் கடந்த ஐந்து ஆண்டுகாலப் பகையும், கோபமும் பனிபோல உருகின.

கணவரின் அன்பையும், தனது தந்தையைக் காப்பாற்றிய பெருந்தன்மையையும் உணர்ந்த ஷிகா, அடுத்த நொடியே தனது வழக்கறிஞரின் கையில் இருந்த விவாகரத்து ஆவணங்களை பிடுங்கி, நீதிமன்ற அறையிலேயே கிழித்தெறிந்தார்.

பின்னர் ஓடிச்சென்று தனது கணவர் சௌரபை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினார்.

நெகிழ்ச்சி

இதை கண்டு அங்கிருந்த நீதிபதி, வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் நெகிழ்ச்சியில் கண் கலங்கினர்.

விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அந்தத் தம்பதியினர் கைகோர்த்து நீதிமன்றத்தை விட்டுப் புன்னகையுடன் வெளியேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com