

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் சிஜேபி போராட்டத்திற்குப் பிரபல பஞ்சாபி பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசாஞ்ச் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்துள்ள அவர், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பதால், தனக்கு மீண்டும் "தேசவிரோதி" என்ற முத்திரை குத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
"இன்று நடந்தது மிகவும் தவறானது. மாணவர்களை இப்படி நடத்தியிருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளும் நிர்வாகமும் கவனமாகக் கேட்டுப் பரிசீலிக்க வேண்டும். மக்களின் குரலே கடவுளின் குரல் ."மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவதால் மீண்டும் தன் மீது "தேசவிரோதி" என்ற விமர்சனங்கள் எழக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், கல்வித் துறையில் உடனடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை பலப்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தில்ஜித் தோசாஞ்ச் மட்டுமன்றி, பாலிவுட் பிரபலங்களான பூமி பெட்னேகர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போதும் தில்ஜித் தோசாஞ்ச் விவசாயிகளுக்கு ஆதரவாக நேரில் சென்று குரல் கொடுத்தார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், தாம் சந்தித்த கடுமையான விமர்சனங்கள், சமூக வலைதளத் தாக்குதல்கள் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் குறித்து இப்போதும் வெளிப்படையாகப் பேச முடியாத நிலை உள்ளதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.