சிசோடியா, கெஜ்ரிவாலை தொடர்ந்து கைலாஷ் கெலாட்டுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

மதுபான கொள்கையில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.கெஜ்ரிவாலை வரும் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.
சிசோடியா, கெஜ்ரிவாலை தொடர்ந்து கைலாஷ் கெலாட்டுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
Published on

புதுடெல்லி:

டெல்லி மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, 22-ம் தேதி கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக வாதிடப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருடன் கெஜ்ரிவால் தொடர்பில் இருந்து வந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்தது.

ஆனாலும், இந்தக் குற்றச்சாட்டில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி உள்துறை, போக்குவரத்து மற்றும் சட்ட மந்திரியாக உள்ள கைலாஷ் கெலாட்டிற்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி கைலாஷ் கெலாட் இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com