டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!

நீதிமன்றம் இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரிக்கை.
SuryaKant
Published on

டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தவறினால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு:

தலைநகர் டெல்லியில் நிலவி வரும் அரசியல் போராட்டத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றம், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வர முடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.

அப்போது பேசிய அவர், "மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்:

வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்

பின்னணி

டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, போராட்டத்தில் போலீசாரின் அத்துமீறல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட அவசரக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com