விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!

ஒரு குடிமகனுக்குத் தனக்குப் பிடித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முழு உரிமை உண்டு.
Sonam Wangchuk
Published on

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் (CJP) நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக 24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல பருவநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், டெல்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையிலிருந்து குருகிராமில் உள்ள மெதாந்தா தனியார் மருத்துவமனைக்கு மாற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனக்கு விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றம்:

டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்ததால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அகற்றி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடினார்.

வழக்கறிஞர்களின் காரசார வாதம்:

சோனம் வாங்சுக் கைது செய்யப்படவோ அல்லது எவ்விதக் குற்றச்சாட்டின்கீழ் சிறையில் அடைக்கப்படவோ இல்லை என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அகில் சிபல், ஒரு குடிமகனுக்குத் தனக்குப் பிடித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முழு உரிமை உண்டு என வாதிட்டனர்.

மத்திய அரசின் சம்மதம்:

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சோனம் வாங்சுக்கை மெதாந்தா மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இதுவரை சோனம் வாங்சுக்கிற்கு அளிக்கப்பட்ட அனைத்து மருத்துவச் சான்றுகளும் அறிக்கைகளும் உடனடியாக மெதாந்தா மருத்துவமனைக்கு வழங்கப்பட வேண்டும்.மெதாந்தா மருத்துவமனை இயக்குநர் தலைமையில் சோனம் வாங்சுக்கிற்கு சிகிச்சை அளிக்கத் தனியாக மருத்துவர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மெதாந்தா மருத்துவர்களின் ஆலோசனையின்றி அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படக் கூடாது.

சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை:

24 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் சோனம் வாங்சுக்கின் ரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் குறைந்துள்ளதாகவும், யூரிக் அமிலம் அதிகரித்து உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. உடலில் சர்க்கரை அளவு குறைந்துள்ள போதிலும், அவர் உணவு மற்றும் குளுக்கோஸ் எடுத்துக்கொள்ள மறுத்து வருவதால், தொடர்ந்து தீவிர கண்காணிப்பு தேவை என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com