மானிய விலை அரிசியில் ரூ.22,000 கோடி ஊழல்.. டெல்லி பாஜக அரசு மீது ஆம் ஆத்மி பரபரப்பு குற்றசாட்டு

வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடி.
ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்
ரேகா குப்தா, சௌரப் பரத்வாஜ்
Published on

ஏழைகளுக்கு வழங்க வேண்டிய மானிய விலையிலான அரிசியை தனியார் நிறுவனத்திற்கு விற்று ரூ.22,000 கோடி ஊழல் செய்ய ரேகா குப்தா தலைமையிலான டெல்லி பாஜக அரசு திட்டமிட்டதாக ஆம் ஆத்மி டெல்லி மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் குற்றச்சாட்டியுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய சௌரப்,

மானிய விலை அரிசி

டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா தலைமையிலான உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கார்ப்பரேஷன் இணைந்து இந்திய உணவுக் கழகத்திடம் மானிய விலையிலான அரிசியைக் கோரியுள்ளன.

டெல்லியில் உள்ள ரேஷன் கார்டு இல்லாத ஏழை மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதற்காக வாரத்திற்கு 31,000 மெட்ரிக் டன் அரிசி வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் இந்திய உணவுக் கழகம் மூலம் பல வாரங்களாக அரிசி அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மானிய விலை அரிசி டெல்லியில் உள்ள எந்தவொரு ஏழை மக்களுக்கும் சென்றடையவில்லை.

ரூ.22,000 கோடி ஊழல்

இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட அரிசி முழுவதும் அசாமுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அரியானாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த அசாம் கார்ப்பரேஷன் வாரத்திற்கு ரூ.70 கோடி கமிஷன் ஈட்டியுள்ளது.

வாரத்திற்கு ரூ.143 கோடி வீதம், 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22,000 கோடிக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டு இந்த ஊழல் நடத்தப்பட்டு வந்துள்ளது.

அம்பலம்

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை இதை கண்டறிந்து பிடித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இதன் பேரில் சில அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சௌரப் பரத்வாஜ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அசாமை சேர்ந்த அந்த கார்ப்பரேஷன் என்னவென்று அவர் விளக்கவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா அல்லது டெல்லி அரசிடமிருந்து பதில்கள் எதுவும் இன்னும் வரவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com