தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!

பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Connaught Place
Published on

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்ற வீதிப் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வர்த்தக மையமாகவும் விளங்கும் 'கனாட் பிளேஸ்' பகுதியில் நிலவும் சிக்கலான சூழல் காரணமாக, அங்குள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவசர உத்தரவு:

கனாட் பிளேஸில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் அனைத்தும் இன்று மாலை 6:30 மணிக்குள் முழுமையாக அடைக்கப்பட வேண்டும். புதுடெல்லி நகராட்சி மன்ற தலைவரின் நேரடித் தொலைபேசி அறிவுறுத்தலின் பேரில், ‘புதுடெல்லி வர்த்தகர்கள் சங்கம்’ தனது உறுப்பினர்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு:

அசம்பாவிதங்கள், சொத்து சேதங்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு:

ஜந்தர் மந்தர், ஜனபத் மற்றும் கனாட் பிளேஸை இணைக்கும் முக்கியச் சாலைகளில் டெல்லி காவல் துறை மற்றும் துணைப் ராணுவப் படையினர் (CRPF, RAF) ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ போக்குவரத்து பாதிப்பு:

பாதுகாப்பு கருதி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள ராஜீவ் சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து பலத்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் பேரணி மற்றும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கையாகக் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு NDMC மற்றும் வர்த்தகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com