டெல்லியில் ‘Cockroach Janta Party’ போராட்டம்-மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

"ஏற்கனவே, இந்த முறைகேடு தொடர்பாக பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்"
Cockroach Janta Party" Protest in Delhi
Published on

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வேகமாக வளர்ந்துள்ள Cockroach Janta Party (CJP) அமைப்பு, இன்று (ஜூன் 6) டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தியது. இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஜந்தர் மந்தர், கல்வி அமைச்சர் இல்லம் மற்றும் டெல்லி எல்லைகளில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் திப்கே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்கள் கைகளில் தேசியக் கொடியையும், கல்விச் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் விதமாக ஒரு புத்தகத்தையும் ஏந்தி வருமாறு சிஜேபி தலைமை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசாருக்கு அன்பின் அடையாளமாக பூக்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில், NEET-UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள், CBSE-யின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறை குறைபாடுகள், மற்றும் CUET, SSC ஆகிய தேசியத் தேர்வுகளில் நடந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மறுபுறம், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே, இந்த முறைகேடு தொடர்பாக பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடு புகார்களைத் தொடர்ந்து NEET-UG 2026 தேர்வு ஜூன் 21-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சங்க் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டால், தான் 6 வாரங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுக்கியுள்ளது. கடந்த சில வாரங்களிலேயே சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றுள்ள இந்த இயக்கம், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, கல்வி சீர்கேடுகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அதிருப்தியை பிரதிபலிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமூக ஊடகங்களில் தொடங்கிய ஒரு இளைஞர் இயக்கம், தற்போது டெல்லி தெருக்களில் நேரடி அரசியல் அழுத்தமாக மாறியிருப்பது இந்திய அரசியலில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com