CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!

"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்"
Rhiya Yadav
Published on

மும்பையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை மறித்து சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்த 27 வயதான மாடல் அழகி 'ரியா யாதவ்', தனக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இணையவழி அவதூறு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மும்பை எம்பிடிசி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.

சம்பவத்தின் பின்புலம்:

கடந்த ஜூலை 22 அன்று, மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சென்ற போலிஸ் வேனை ரியா யாதவ் தனது கைகளை விரித்து நின்று மறித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவருக்குப் பரவலான ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.

இணையவழித் தாக்குதல்:

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர். அதில், ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ஆபாச உள்ளடக்கங்களை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகச் சிலர் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

மேலும், அவரது புகைப்படங்களை மங்கலாக்கி வீடியோக்களாக வெளியிட்டு, தவறானத் தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது பெற்றோர் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காகவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

காவல் துறை நடவடிக்கை:

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிரா சைபர் செல்லில் ஆன்லைன் மூலம் புகார் அளித்த ரியா, நேற்று MIDC காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சாட்சியங்களைச் சமர்ப்பித்தார். காவல் நிலையத்தில் திரையிடப்பட்ட வீடியோ ஆதாரங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங்குகளை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "காவல் துறையினர் மிகவும் ஒத்துழைப்புடனும் விரைவாகவும் செயல்பட்டனர். நடைமுறைகளை அவர்கள் துரிதப்படுத்தியதால், திட்டமிட்டபடி மூத்த சைபர் செல் அதிகாரியைச் சந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.

இப்புகார் தொடர்பாக ரியா யாதவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்த பின் விரைவில் FIR பதிவு செய்யப்படும் என்றும் MIDC காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com