CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!

நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.
TISS UNIVERSITY-SURYA KANT
Published on

மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனத்தின் 86வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுவதாக இருந்தது. இதில் முதன்மை விருந்தினராக இந்திய தலைமை நீதிபதி 'சூர்ய காந்த்' கலந்துகொண்டு உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய TISS நிர்வாகம், "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவித்தது.

போராட்ட பயம்:

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், தலைமை நீதிபதி சூர்யா காந்த் வருகையின் போது வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை மற்றும் காவல்துறை அச்சமே இந்த ஒத்திவைப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவுக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில், நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர். கடைசி நிமிடத்தில் விழா ரத்து செய்யப்பட்டதால் அவர்களது பயணச் செலவு மற்றும் விடுதிச் செலவுகள் வீணாகிப் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

நிவாரணம் அளிப்பதாக உறுதி:

திடீர் ஒத்திவைப்பால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தகுந்த கோரிக்கைகளுக்கு நிதி உதவி/நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக TISS நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர் அமைப்புகள் கண்டனம்:

மாணவர் அமைப்புகள் TISS நிர்வாகத்தின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் மாணவர்களை அவமதிக்கும் செயல் என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மாணவர் போராட்டங்களுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் பயந்து தலைமை நீதிபதி பங்கேற்கவிருந்த உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவே ஒத்திவைக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com