

போராட்டத்தை கைவிட வேண்டுமென்றால் எங்களின் 3 முக்கிய கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று கராப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) செய்தி தொடர்பாளர்கள் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் செய்யக்கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (CJP) டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் பாராளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.
இந்த போராட்டத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டெல்லிக்கு வெளியில் இருந்து வருவோரை தடுக்கும் வகையில் முக்கிய நுழைவு வாயில்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவு அதிரடிப்படையினரும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டனர். ஜந்தர் மந்தரில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். டெல்லியில் இணைய தள சேவையும் துண்டிக்கப்பட்டது.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகையில், "அமைதியான முறையில், பாராளுமன்றம் நோக்கி நாங்கள் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆனால், எங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது என்று தெரியவில்லை. ஜந்தர் மந்தர் அருகே கற்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" என்று தெரிவித் துள்ளார்.
இந்த நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இன்று காலையில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆனாலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் கரப்பான் பூச்சி கட்சி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கலைந்து ஓடினார்கள். சிலர் தடியடியையும் மீறி அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். சிலரை கைது செய்தனர்.
இதற்கிடையே பேரணியில் ஈடுபட்ட சிலர் பாராளுமன்றம் அருகே வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். மேலும் அவர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முடியாமல் தடுக்க பாராளுமன்றத்தின் வடக்கு நுழைவு வாயிலை மூடினார்கள். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.
இந்த நிலையில் கராப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அஷுடோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதற்கு இவர்கள் எங்களுடைய 3 கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிட தயார் என்று தெரிவித்துள்ளனர்.
நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். சீரழிந்த உயர் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கைகள் என்று அவர்கள் நட்டாவிடம் தெரிவித்துள்ளனர்.