

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர்.
கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போலீசார், துணை ராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்த மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததாகவும், எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள் என்று அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை தொடர்பாக எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. விசாரிக்க மறுத்ததாக பொறுப்பற்ற வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமான வகையில் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது. நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
நீதிமன்றத்திற்கு வந்தது வெறும் ஒரு கோரிக்கை மனு மட்டுமே. மிஷ்ரா அல்லது வேறு யாரோ ஒருவரால் அனுப்பப்பட்ட ஒரு கோரிக்கை மனு மட்டுமே. அந்தக் கோரிக்கை மனுவை நான் எப்படி ஒரு ரிட் மனுவாக (writ petition) கருத முடியும்? ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டனர்.
கடந்த இரண்டு நாட்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக முற்றிலும் பொய்யான தகவல் பரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரணைப் பட்டியலிடத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டதாக ஊடகங்கள் எந்த பொறுப்புணர்வும் இன்றி பொறுப்பற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்டன. ஆனால், காலை 10 மணி வரை ஒரு பக்கம் கூட தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் நரேந்திர மிஷ்ரா, வாய்மொழியாக உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பட்ட கடித மனுவை வழகறிஞர் மிஷ்ரா குறிப்பிட்டார். அப்போது, மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் எடுத்த நடவடிக்கை தொடர்பான வீடியோக்களை பார்வையிட வேண்டும் என்றார். அப்போது தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது. அப்போது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தெரிவித்தது.