

காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,
“நீர்ப்பாசன விவகாரம் தொடர்பாக, நேற்று அவர்கள் சிறிதளவு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அது குறித்த விவரங்கள் எங்களுக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர் எம்.பி. பாட்டீல் உள்ளிட்ட எங்கள் அமைச்சர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். அந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் பெங்களூரு சென்றதும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவேன்.
இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசுவதற்குத் தமிழ்நாடுத் தரப்பிலிருந்தும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்; தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர்.
அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமையாகும்.'சரி, வாருங்கள்' என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். அதோடு, நமது மாநிலத்தின் காவிரிப் படுகைப் பகுதிகள் குறித்தும் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளேன்; அப்பகுதிகளை ஆய்வு செய்வதற்கு ஹெலிகாப்டர்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.