

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாள்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 பேர் வீதம் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக கேதார்நாத் வழித்தடத்தில் மாரடைப்பு மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் காரணமாக 80 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். பத்ரிநாத் வழித்தடத்தில் 48 இறப்புகளும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பு மற்றும் கடுமையான ரத்த அழுத்த மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலங்களில் நிலவும் குறைந்த ஆக்சிஜன் அளவு மற்றும் செங்குத்தான மலைப்பாதைகள் சுவாசப் பிரச்னைகள், மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.
ஆரம்பகட்ட உடல்நலக் குறைபாடுகளைப் புறக்கணித்துவிட்டு, யாத்திரையை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயணிப்பதும் மரணங்களுக்குக் காரணமாக அமைகிறது.
இதனைத்தொடர்ந்து வயதான பக்தர்களும், இதயம், சுவாசம் அல்லது இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைச்சுற்றல் அல்லது அதீத சோர்வு போன்ற அறிகுறிகளை பக்தர்கள் புறக்கணிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தொடங்கிய யாத்திரை நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. கிட்டதட்ட இன்னும் 5 மாதங்கள் உள்ளன. சனிக்கிழமை வரை 31,65,746 பக்தர்கள் இமயமலையின் புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களையும் தரிசித்துள்ளனர்.
மேலும் இந்த இதுவரை யாத்திரைக்காக சுமார் 47 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.