

சிபிஎஸ்இ பிளஸ்-2 விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் திருத்தும் முறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி, விடைத்தாள் ஸ்கேனிங் மற்றும் மறுமதிப்பீடு பணிகளைச் செய்து வந்த ‘கோஎம்ப்ட் எடுடெக்’ தனியார் நிறுவனத்தின் சர்வரில் இருந்த மாணவர்களின் அனைத்து மதிப்பெண் தரவுகள் மற்றும் ஆவணங்களை, சிபிஎஸ்இ தனது சொந்த கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்களுக்கு அவசரமாக மாற்றியுள்ளது.
மாணவர்களின் விவரப் பாதுகாப்பு மற்றும் தரவு மேலாண்மையை பலப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகள் மாற்றப்படாலும், பிளஸ்-2 விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுப் பணிகளுக்குத் தற்போதைய 'கோஎம்ப்ட்' நிறுவனத்தின் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் டிஜிட்டல் தளமே தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
இதனால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பணிகளில் எந்தவொரு தங்குதடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனனர்.
சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு ஒப்பந்தத்தைப் பெற 'கோஎம்ப்ட்' நிறுவனம் சமர்ப்பித்த இணையப் பாதுகாப்புச் சான்றிதழ்கள் போலியானவை, காலாவதியானவை மற்றும் தற்காலிகமானவை என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
2025 தொடக்கத்திலேயே இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து எச்சரித்தும் கல்வி அமைச்சகம் அலட்சியமாக இருந்ததால், லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் சாடியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே சிபிஎஸ்இ-யின் புதிய டிஜிட்டல் திருத்தும் முறை மீது பெற்றோர்களும், ஆசிரியர்களும் அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வந்தனர்.
குளறுபடி எழுந்த நிலையில், நிசர்கா அதிகாரி என்ற இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், சிபிஎஸ்இ-யின் ஓஎஸ்எம் தளத்தில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி மாணவர்களின் ரகசியத் தரவுகளை எளிதாக ஹேக் செய்ய முடியும் என்று ஆதாரத்துடன் நிரூபித்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிபிஎஸ்இ, "தனியார் நிறுவனத்தின் இணையதளத்தில் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால், அது உடனடியாகச் சரி செய்யப்பட்டுவிட்டது.
இணையத்தில் வைரலான போஸ்ட்களில் காட்டியது வெறும் போலித் தரவுகளைக் கொண்ட சோதனைப் பக்கமே தவிர, ஒரிஜினல் விடைத்தாள் திருத்தப்பட்ட தளம் அல்ல" என்று விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான அதிருப்தியைத் தொடர்ந்து, தொழில்நுட்பத்திற்குத் தனியார் நிறுவனத்தைப் பயன்படுத்தினாலும், மிக முக்கியத் தரவுகளைத் தனது சொந்த சர்வரிலேயே வைத்திருக்க சிபிஎஸ்இ தற்போது முடிவு செய்துள்ளது.