NEET UG 2026: வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

CBI
Published on

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், வினாத்தாள் நிபுணர்கள் மூவர், பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவர், இடைத்தரகர்கள் மற்றும் பலனடைந்த தேர்வர்கள் உட்பட 13 பேர் மீது சி.பி.ஐ. நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் முறைகேடு மற்றும் பொது தேர்வு சட்டம், 2024-இன் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளுடன், பி.என்.எஸ். (BNS) சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, மோசடி, நம்பிக்கையை மீறுதல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளையும் சி.பி.ஐ. சேர்த்துள்ளது.

422 ஆவணங்கள்:

"இந்தக் குற்றப்பத்திரிகையில் 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற்றும் 43 முக்கிய பொருட்கள் ஆகியவற்றை சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள 13 பேரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்," என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கசிந்த வினாக்கள் தொடர்பான டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகள், கையெழுத்து நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கல்விசார் நிபுணர்களின் கருத்துகளையும் சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளது.

"தேர்வு தேதிக்கு முன்னதாகவே கசிந்த வினாக்களை பரப்பியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தின," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வினாத்தாள் கசிவு:

மே 03-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை மே 12-ஆம் தேதி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைமையிலான 'Gen Z' குழுவினர் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்; இது அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதற்கு வழிவகுத்தது.

முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பிறகு, சி.பி.ஐ. தீவிர நடவடிக்கையில் இறங்கி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 92 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்:

இரண்டு மாத கால விசாரணையின் போது, ​​வினாத்தாள் கசிவு தொடங்கிய இடம் முதல் பலனடைந்த தேர்வர்கள் வரை இருந்த சதியை அது கண்டறிந்து, குற்ற சங்கிலி தொடர்பை அடையாளம் கண்டது. தேசிய தேர்வு முகமையின் பாட நிபுணர்களான பி.வி. குல்கர்னி, மனிஷா குருநாத் மந்தரே மற்றும் மனிஷா சஞ்சய் ஹவல்தார் ஆகிய மூவரையும் இவ்வழக்கில் சி.பி.ஐ. குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் பெயரிட்டுள்ளது.

லாத்தூரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் ஷிரூரே, புனேவை சேர்ந்த பயிற்சி மையமான 'டாக்டர் அபங் பிரபு மெடிக்கல் அகாடமி'யின் இயற்பியல் ஆசிரியரான தேஜஸ் ஹர்ஷத்குமார் ஷா மற்றும் லாத்தூரை சேர்ந்த மற்றொரு பயிற்சி மையத்தை சேர்ந்த சிவராஜ் ரகுநாத் மோட்டேகான்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"கசிந்த வினாக்களைத் திரட்டி விநியோகித்த பல இடைத்தரகர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய நிபுணர்களிடம் இருந்து கசிந்த வினாத்தாள்களை பெற்றதற்காக, பயிற்சி மையங்களுடன் தொடர்புடைய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com