

பீகார் தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம், பள்ளிகள் மற்றும் பஸ்போர்ட் அலுவலகங்களை குறிவைத்து அனுப்பப்பட்ட தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள், பாட்னா மற்றும் கயாஜியில் பாதுகாப்பு எச்சரிக்கையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்துறை ஆணையர் மற்றும் மாநில தலைமை செயலகம் உள்ளிட்ட பல அதிகாரப்பூர்வ அரசு மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் மிரட்டல் மின்னஞ்சல், பாட்னாவில் உள்ள முக்கிய அரசு நிறுவனங்களில் குண்டுவெடிப்புகள் நிகழும் என எச்சரித்ததாக அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு அதிகரிப்பு:
முக்கிய அரசு நிறுவனங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று பெறப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (பாட்னா - மத்திய) மம்தா கல்யாணி கூறினார். "காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நகருக்கு உள்ளேயும் அதை சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, அந்த மின்னஞ்சலை அனுப்பியவர் காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டார். மேலும், 2023 ஜூன் மாதம் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
மனித வெடிகுண்டு தாக்குதல்:
அந்த மின்னஞ்சலில், நிஜ்ஜாரின் கொலைக்கு அப்போதைய கனடாவுக்கான இந்திய உயர் ஆணையரே காரணம் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டிருந்தது. மேலும், பீகார் அரசு அவருக்கு பாட்னாவில் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் அவரை குறிவைப்பதாகவும் அது மேலும் அச்சுறுத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாட்னாவின் தானாபூர் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்திருந்தன.
தீவிர சோதனை:
வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் மோப்ப நாய் படைகள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தினர், ஆனால் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் குறித்து அதன் கிளைகளை எச்சரித்ததை தொடர்ந்து, கயாஜியில் உள்ள பொது அஞ்சல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பாதுகாப்பு படையினர் சோதனைகளை நடத்தினர்.
சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் ஷாமின் அகமது கூறுகையில், வெடிகுண்டு அகற்றும் மற்றும் மோப்ப நாய் படைகள் வளாகத்தை ஆய்வு செய்து, அந்த மிரட்டல் ஒரு பொய் என அறிவித்தன.
மூத்த அஞ்சல் அதிகாரி பிரணவ் குமார் ஜா கூறுகையில், பாட்னாவில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அந்த மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.