சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!

நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!
Published on

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.

தற்போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகர் சல்மான்கான்

போராட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள சல்மான் கான்,

“இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.

அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கல்வி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும். எந்த அளவுக்கு என்றால் வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையும் உருவாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஆலியா பட்,

“உறுதியுடன் நிலைத்து நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்கள் நிறைந்த ஒரு பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களுக்குத் துணையாக நின்ற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; அதேவேளையில், தங்களுக்குப் பின் வருபவர்களுக்காக ஒரு சிறந்த பாதையையும் உருவாக்குகிறார்கள்.

அவர்களின் துணிச்சல் என்னுள் பணிவை ஏற்படுத்துகிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாகத் திகழ்கிறது; இந்நாட்டின் நாளைய எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் அந்த மனிதர்களின் குரலை நாம் உண்மையிலேயே செவிமடுக்கிறோமா என்று அது நம்மை வினவுகிறது.

மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனன்யா பாண்டே,

“Gen Z தலைமுறையினர் இப்படித்தான் என எப்போதுமே ஒரு லேபிள் ஒட்டப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ள இதுவே சரியான தருணம். எப்போதுமே இப்படித்தான் என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் குறுக்கு வழிகளைக் கேட்கவில்லை; நியாயமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கேள்வி கேட்பது மரியாதைக் குறைவு அல்ல; குரல் கொடுப்பது கலகமும் அல்ல. மாற்றம் இப்படித்தான் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com