

பீகாரில் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பெற்ற, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர், பீகார் ஒரே இரவில் பெங்களூராக மாறிவிடாது என்றும் ஆனால் மக்கள் கண்கூடாக பார்க்கும் மாற்றங்கள் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் பங்கிபூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது இத்தொகுதியில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹாவை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதால் பங்கிபூர் பெங்களூருவாக மாறிவிடாது, ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் இங்கு சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
மக்கள் என்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி, பங்கிபூரை மேம்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள். நான் பெரிய தற்பெருமை பேச விரும்பவில்லை.
இந்தப் போராட்டம் தனிப்பட்டதல்ல, சாம்ராட் சௌத்ரியின் நடத்தை, குணம் மற்றும் முகம் ஆகியவை பொதுவெளியில் உள்ளன. ஒரு குற்றவாளியை பீகாரின் முதலமைச்சராக ஆக்கினால், பீகார் முன்னேற முடியாது.
எங்கள் போராட்டம் எந்தவொரு தனிநபருடனும் கிடையாது. பெரும்பான்மையினர் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள், எனவே முதலமைச்சர் பதவி அவர்களுக்கே கிடைக்கும்.
பீகார் முன்னேறவும், மக்கள் பீகாரியாக இருப்பதில் பெருமை கொள்ளவும், திறமையான, நல்ல குணநலன்கள் கொண்ட ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்று நாங்கள் மோடிஜியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தேர்தல் பங்கிபூரின் தெருக்கள் மற்றும் வடிகால்களுக்காக நடத்தப்படவில்லை. பீகாரை யார் வழிநடத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. பங்கிபூர் மக்கள் பாஜக தலைமைக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளனர். ஒரு நல்ல மனிதரை முதலமைச்சராக்குங்கள்,” என்று அவர் கூறினார்.
இதையடுத்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறி, கிஷோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மாபெரும் திருவிழாவான பாங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், மக்கள் ஜன் சுராஜைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களின் முடிவை மதித்து, பிரசாந்த் கிஷோர் அவர்களின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று சௌத்ரி பதிவிட்டுள்ளார்.