புதுடெல்லியில் பிபின் ராவத் இறுதி ஊர்வலம்- ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

பிபின் ராவத் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் அண்டை நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலம்
Published on

புதுடெல்லி:

குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.  கன்டோன்மென்ட் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.

முன்னதாக பிபின் ராவத் இல்லத்திற்கு  மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், மனுசுக் மாண்டவியா, ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் சென்றனர். அங்கு பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.  இதேபோல் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நராவனே, விமானப்படை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் ஆகியோரும் பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். உச்சநீதிமன்ற தலைமைத் தளபதி என்.வி.ரமணா பிபின் ராவத் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் ஏற்றப்பட்டன.  ராணுவத்தின் கூர்க்கா துப்பாக்கிப்படை பிரிவு சார்பில் பிபின் ராவத் இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லி கன்டோன்மென்ட் பகுதி மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

பிபின் ராவத் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தை கண்டதும் வழி நெடுகிலும் திரண்ட மக்கள், சூரியன் சந்திரன் இருக்கும் வரை அவரது பெயர் இருக்கும் என்று கோஷமிட்டவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர். பலர் தேசியக்கொடிகளை ஏந்தி முழக்கமிட்டபடி ஊர்வலத்தில் வந்தனர்.

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி மரியாதை நிகழ்ச்சியில் இலங்கை, பூடான், நேபாள் மற்றும் பங்ளாதேஷ் நாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com