நடுரோட்டில் தந்தை உடல் அருகே அழுது துடித்த 2 வயது சிறுவன்

தந்தையின் பிணத்தின் அருகே சென்ற சிறுவன் உடலை கைகளால் அசைத்த படி கதறி அழுதான். போலீசார் கனக பிரசாத் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடுரோட்டில் தந்தை உடல் அருகே அழுது துடித்த 2 வயது சிறுவன்
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அப்துல்லாபூர் மேடு பகுதியை சேர்ந்தவர் கனக பிரசாத் (வயது 37). தொழிலதிபரான இவர் நேற்று பால் வாங்குவதற்காக வெளியே புறப்பட்டார்.

அப்போது அவருடைய 2 வயது மகன் தானும் தந்தையுடன் செல்ல வேண்டுமென அடம்பிடித்தான்.

மகனை ஆசையோடு தூக்கிக்கொண்டு பைக்கில் கனக பிரசாத் பால் வாங்க சென்றார். அங்குள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக அவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கனக பிரசாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவருடைய 2 வயது மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தந்தையின் பிணத்தின் அருகே சென்ற சிறுவன் உடலை கைகளால் அசைத்த படி கதறி அழுதான். நெஞ்சை உலுக்கிய இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவனை தூக்கி ஆறுதல் கூறினர். ஆனாலும் சிறுவன் தந்தையின் உடலை நோக்கி கைகளை நீட்டியபடி அழுது கொண்டே இருந்தான். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெளியே சென்ற கணவர் மற்றும் மகன் வீடு திரும்பாததால் கனக பிரசாத்தின் மனைவி பால் வாங்கும் கடைக்கு தேடி வந்தார்.

நடுரோட்டில் கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். அவரிடம் அழுது கொண்டிருந்த சிறுவனை ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் கனக பிரசாத் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை உடல் அருகே சிறுவன் கதறி அழுத காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com