

பீகாரில் காவல்துறை மற்றும் மதுவிலக்குத் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குச் செல்ல போதுமான ரெயில்கள் இல்லை எனக் கூறி தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏராளமான தேர்வர்கள் ரெயில் தண்டவாளத்தில் குதித்து ரெயிலின் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும் கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் பாட்லிபுத்ரா ரெயில் நிலையத்தில் பல மணி நேரம் ரெயில் போக்குவரத்து முடங்கியது.
நிலைமை மிகவும் மோசமடையவே ரெயில்வே மற்றும் மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜிதேந்திர ராணா, மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருப்பினும் பதற்றம் தணியாததால் கூட்டத்தைக் கலைத்து அமைதியை நிலைநாட்ட போலீசார் மூன்று முறை வான்வழித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் ரெயில் நிலையத்தில் கூடுதலாக காவல் படைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்தக் கலவரத்தின் போது, ஐ.ஜி. ராணாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் போராட்டத்தால் ரெயில் சேவைகளில் ஏற்பட்ட தாக்கத்தை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
இத்துடன் நிலைமையைச் சீர்செய்ய ரெயில்வே சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்ததுடன் தேர்வர்களை வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல மாற்றுப் பயண ஏற்பாடுகளையும் செய்தது.