

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசுப் பேருந்தில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற நபரை பேருந்து ஓட்டுநரும் சக பயணிகளும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐடி காரிடார் பகுதியில் உள்ள மான்யதா டெக் பார்க் அருகே வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, அருகே இருந்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு தவறான முறையில் தொட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், உடனடியாக அந்த நபரை தைரியமாகத் தட்டிக்கேட்டு, அவரது கன்னத்தில் பளார் அறை விட்டுள்ளார்.
பயத்தில் அந்த நபர் உடனடியாகப் பேருந்தில் இருந்து இறங்கித் தப்பி ஓட முயன்றார்.
நிலமையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தின் கதவுகளை மூடி, அந்த நபர் தப்பிச் செல்வதைத் தடுத்தார்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். சமூக வலைத்தளங்களில் இச்சம்பவத்தின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துச் சம்பிகேஹள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.