மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
Published on

மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் ஒன்றில், காவலில் வைக்கப்பட்டு இருந்த வீரர் ஒருவர், அங்கு பணியில் இருந்த மற்றொரு வீரரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டார்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

இந்த சம்பவத்தில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் மால்டா மாவட்டம், பைஷ்ணப்நகர் பகுதியில் உள்ள 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் நடந்தது. இந்த சம்பவத்தில் சக வீரர் சிவம்குமார் மிஸ்ரா என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

எல்லை பாதுகாப்பு படை வீரர் சிவம்குமார் மிஸ்ரா ராணுவ கோர்ட்டு உத்தரவின்பேரில் 119-வது பட்டாலியன் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று மாலை அவர் பணியில் இருந்த வீரர் வைத்திருந்த துப்பாக்கியை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அந்த துப்பாக்கியால் அருகில் இருந்த ராணுவ முகாம்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.

பாதுகாப்புப் படையினர் கைது

உடனடியாக அவர்கள் மால்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பீகாரை சேர்ந்த அஜய்குமார் சிங் (வயது 51), மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அம்படார் சுரேஷ் (36) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com