

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் 52 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய கூட்டு அதிரடிச் சோதனையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அப்பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை ஜூன் 7 அன்று தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் கனிஸ்போராவில் உள்ள எஃப்.சி.ஐ கிடங்கு அருகே தற்காலிக மொபைல் வாகனச் சோதனைச் சாவடியை அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீநகரில் இருந்து பாராமுல்லா நோக்கி வந்த ஒரு வெள்ளை நிற காரை மறித்துச் சோதனை செய்தனர்.
காரில் பயணம் செய்த நபரின் பையைச் சோதித்த போது, அதற்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டில் தயாரிக்கப்பட்ட "கானிக்" என்ற அதிநவீன கைத்துப்பாக்கியைக் கண்டெடுத்தனர்.
துப்பாக்கியை வைத்திருந்த நபர் உரியின் கமல்கோட் பகுதியைச் சேர்ந்த வகீல் அகமது தீக்ரி என அடையாளம் காணப்பட்டார்.
அவரிடம் முறையான உரிமம் இல்லாததால் போலீசார் அவரை உடனடியாகக் கைது செய்தனர். காரின் ஓட்டுநர் தனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று ( ஜூன் 8) போலீசார் நடத்திய அடுத்த கட்ட தொடர் சோதனையில், கல்சி ஹர்து பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 13 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பாராமுல்லா போலீஸார் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆயுதங்கள் எதற்காகக் கடத்தப்பட்டன, இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார் என்பது குறித்துத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதியைக் குலைக்கும் எந்தவொரு சட்டவிரோதச் செயல்களுக்கும் இடம் அளிக்கப்பட மாட்டாது என்றும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாராமுல்லா போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.