

பேங்க் ஆஃப் பரோடா தேசிய வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சுமார் 1,000 ஜிபி டேடா கொண்ட தரவுகள், டார்க் நெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக டார்க் வெப் இன்டெலிஜென்ஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
குஜராத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1908-ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசிய வங்கியான பேங்க் ஆஃப் பரோடா ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வங்கி நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது பணத்தை வசதியாக எடுத்துக்கொள்ளும் வகையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்-களையும் கொண்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு, பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் இணையத்தின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பயனர்களின் தொலைபேசி எண்கள், ஆதார் எண்கள், நெட்பேங்கிங் பயனர் ஐடிகள், கடன் விண்ணப்பங்கள், ஏடிஎம் தொடர்பான பதிவு விவரங்கள் டார்க்நெட்டில் கசிந்துள்ளன.
இதுகுறித்து மென்பொருள் பொறியாளரும், கேஷ்லெஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்ரீகாந்த் லட்சுமணன் கூறுகையில், பரோடா வங்கி வாடிக்கையாளர்களின் உண்மையான தகவல்கள் கசிந்துள்ளதாக ஆய்வு செய்து கூறினார்.
இதுதான் வங்கி கிளை தணிக்கையின் தரம் என்றும் செயற்கை நுண்ணறிவு சைபர் இணையத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறும், எக்ஸ் தளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இந்த பிரச்சனையை எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தரவுகள் வெளியான பின்னணியில், தரவு மிரட்டல் மற்றும் ரான்சம்வேர் அச்சுறுத்தல் குழுவான ‘டிரிபிள் எக்ஸ்’ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குறிப்பிட்ட குழு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றின் மீது இணையவழி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.