மேற்கு வங்கத்திலிருந்து 4,800 'ஊடுருவல்காரர்கள்' நாடுகடத்தல் - முதல்வர் சுவேந்து அதிகாரி

முந்தைய வங்க அரசு இவர்களை விருந்தினர்களைப் போல நடத்தி, சிறைகளில் அடைத்து அரசுச் செலவில் உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து வந்தது.
மேற்கு வங்கத்திலிருந்து  4,800 'ஊடுருவல்காரர்கள்' நாடுகடத்தல் - முதல்வர் சுவேந்து அதிகாரி
Published on

பாஜக பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வராத சுமார் 4,800 வங்கதேச ஊடுருவல்காரர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் அவர்,

"மத்திய அரசின் விதிகளின்படி, சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை மாநிலச் சிறைகளில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக, அவர்களை நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்து நாடுகடத்த முடியும்.

பிற மாநிலங்கள் இந்த விதியைப் பயன்படுத்தியபோது, முந்தைய அரசு இவர்களை விருந்தினர்களைப் போல நடத்தி, சிறைகளில் அடைத்து அரசுச் செலவில் உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து வந்தது.

எங்கள் அரசில் இதுவரை 4,800 ஊடுருவல்காரர்கள் அடையாளம் காணப்பட்டு வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ஊருவல்காரர்களை தடுத்து வைக்க எல்லை மாவட்டங்களில் பிரத்யேக தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு வைக்கப்பட்டுள்ள மேலும் 836 ஊடுருவல்காரர்கள் விரைவில் வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களைக் கண்டறிவது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது, பின்னர் அவர்களை நாடுகடத்துவது என்பதே எங்கள் அரசின் முதன்மை நடவடிக்கை.

எல்லைப் பாதுகாப்புப் படை தனது வேலி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான சுமார் 100 கிலோமீட்டர் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com