

12 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படாத வேலட்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டிற்கும் (3 மாதங்களுக்கு ஒருமுறை ) ரூ. 100 பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஃபோன் பே அறிவித்துள்ளது.
இந்த கட்டண வசூல் வேலட்டில் பணம் இல்லாதவர்களுக்கானது அல்ல, மாறாக வேலட்டில் பணம் இருந்து, 365 நாட்களுக்கு அதனைப் பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலற்றதாகிவிடும் என்றும்,
கட்டணம் கழிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு பயனர்களுக்கு ஒரு அறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கழித்தல் வேலட்டில் உள்ள பணத்திற்குதான் பொருந்தும் எனவும், வங்கிக்கணக்கில் உள்ள பணம் பிடித்தம் செய்யப்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வேலட்டில் ரூ. 100-க்கும் குறைவாக (உதாரணமாக ரூ. 20 அல்லது ரூ. 50) இருந்தால், அந்த முழுத் தொகையும் கழிக்கப்பட்டு வேலட் இருப்பு 'பூஜ்ஜியம்' ஆக்கப்படும்.
இதனால் வேலட்டில் பணம் வைத்திருப்பவர்கள் தேவை இல்லையென்றாலும், அதனை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கட்டணத்தை தவிர்ப்பது எப்படி?
உங்கள் வேலட்டில் பணம் இருந்தால், உடனே அதைக்கொண்டு ஏதேனும் ஒரு மொபைல் ரீசார்ஜ் அல்லது கடைகளில் பணப்பரிவர்த்தனை செய்து வேலட்டை மீண்டும் ஆக்டிவேட் செய்யுங்கள்.
இல்லையெனில் வேலட்டில் இருக்கும் பணத்தை உடனடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது முழுமையாகச் செலவழித்து விடுங்கள்.