அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!

9 லட்சம் நிவாரணம் மற்றும் புதிய அதிரடி சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
AssamFloods
Published on

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த இயற்கை பேரிடரில் பலியானோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

4.45 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நேற்று சிவசாகர் மாவட்டத்தின் நாசிரா வருவாய் வட்டத்தில் வெள்ள நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தற்போது மொத்த உயிரிழப்பு 75 ஆக அதிகரித்துள்ளது. 4.45 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், சோனித்பூர் மற்றும் காம்ரூப் மெட்ரோபாலிட்டன் ஆகிய 7 மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 622 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதிகபட்சமாக சராடியோ மாவட்டத்தில் 1.42 லட்சம் மக்களும், சிவசாகரில் 97,000 மக்களும், ஜோர்ஹாட்டுகில் 57,000 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 45,341 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தன்சிரி ஆறு அபாயக் கட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

நிவாரணத் தொகை 9 லட்சம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பல்வேறு முக்கிய சலுகைகளையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நிவாரணத் திட்டங்களையும் அறிவித்தார்.

இனி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட வட்டார அதிகாரி வழங்கும் சான்றிதழே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வழங்கப்படும் ₹4 லட்சம் அரசு நிவாரணத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ₹5 லட்சம் சேர்க்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மொத்தம் ₹9 லட்சம்வழங்கப்படும்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள், ஒரு மாதத்திற்குள் மீட்கப்படாவிட்டால் அவர்களது குடும்பத்திற்கும் இதே ₹9 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரொக்க உதவி மற்றும் இரட்டிப்பு உதவித்தொகை

மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவசாகர், சராடியோ, ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, உடனடி வீட்டுச் செலவுகளுக்காக 15000 ரூபாய் இடைக்கால நிதி உதவி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.

இந்த 4 மாவட்டங்களில் உள்ள திட்டப் பயணிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான உதவித்தொகை ரூபாய் 1250-ல் இருந்து 2500 ஆக இரட்டிப்பாகி வழங்கப்படும் என்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

கல்வி நிதியுதவி மற்றும் கட்டணத் தள்ளுபடி

வெள்ளத்தால் கல்வி பாதிக்கப்பட்ட சிவசாகர் மற்றும் சராடியோ மாவட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வாங்க சிறப்பு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000, இளங்கலை கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000, முதுகலை கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்றும் வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு, நகல் மதிப்பெண் சான்றிதழ்கள் வாங்குதற்கான கட்டணங்கள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி சேகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தீவிரம்

கடந்த 10 நாட்களில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.26 கோடிக்கும் மேல் நிதி வந்து சேர்ந்துள்ளது. இதில் 4610 தனிநபர்கள் வழங்கிய ரூ.60 லட்சம் சிறு நன்கொடைகளும் அடங்கியுள்ளன.

தற்போது ராணுவம், விமானப்படை, என்.டி.ஆர்.எஃப் , எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளூர் தன்னார்வலர்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 81 நிவாரண முகாம்களில் 32 ஆயிரத்து 477 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை:

வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் வீடுகள், பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

மறுபுறம், அகில அசாம் மாணவர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொருட்களை வழங்கி வருவதுடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேரில் வந்து வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com