

அசாம் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையான சிஆர்பிஎப் முகாமில், அதிகாரி ஒருவர் சக வீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று காலை 7 மணியளவில், அசாமின் நகோன் மாவட்டம் கதிமாரி பகுதியில் உள்ள சிஆர்பிஎப் 34-வது பட்டாலியன் முகாமின் வாயிலில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பல்லானி பிரேமாம்பரம் என்பவர், பணியில் இருந்த சக வீரர்கள் மீது திடீரெனத் தனது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சக வீரர்களைச் சுட்ட பிறகு, அதிகாரி பிரேமாம்பரம் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச் சம்பவத்தை தொடர்ந்து முகாமில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தொடங்கினர்.
அதிகாரி மன அழுத்தத்தால் இவ்வாறு செய்தாரா அல்லது வீரர்களுக்கு இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட,
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019