

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 9-ந்தேதி புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த 23-ந்தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்திற்கு கடந்த 23-ந்தேதி முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக இன்று 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மீடியாக்கள் மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்படும். ஆனால் இந்த முறை 5 மாநிலங்களிலும் முழுமையாக தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர்தான் EXIT POLL (தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்பு) வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு கருத்துக் கணிப்பு வெளியிடப்படவில்லை.
இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 6.30 மணிக்கு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.
126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
இதில் ஆக்சிஸ் மை இந்தியா- பாஜக கூட்டணி 88 முதல் 100 இடங்களை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 24 முதல் 36 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Poll Diary, பாஜக கூட்டணி 86 முதல் 101 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 15 முதல் 26 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Matrize பாஜக கூட்டணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் 25 முதல் 32 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
Peoples Insight பாஜக கூட்டணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 34 இடங்களையும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.