

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். அப்போது, 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். 116 போலீசார் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி, அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.
இதையடுத்து, பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன போராட்டத்தில் ஈடுபட்டார் என அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.