சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை

அமர்நாத் குகைக் கோவிலை இதுவரை 3.77 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
amarnath yatra
Published on

காஷ்மீரில் ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை ஆகஸ்டு 28-ம் தேதி நிறைவடையும்.

3.77 லட்சம் பேர் தரிசனம்

அமர்நாத் குகைக் கோவிலை 3.77 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாத்திரை நிறுத்தம்

இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி யாத்திரை நிறுத்தப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். யாத்திரை எப்போது தொடங்கும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கான யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

சீரடைந்த வானிலை

இந்நிலையில், வானிலை சீரடைந்ததை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அமர்நாத் யாத்திரைக்கான 18வது குழு 6,269 பக்தர்களைக் கொண்ட புதிய குழு இன்று அதிகாலை பால்டால் முகாமில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 25 குழந்தைகள், 1470 பெண்கள், 54 சாதுக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.

முன்னதாக, அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. நபர் ஒருவர் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

நடப்பு ஆண்டில் 5 நாட்களில் 90 சதவீதம் அளவுக்கு பனிலிங்கம் உருகியது என்றாலும், பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com