தொகுதி மறுவரையரைக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு .. பாஜகவுடன் மீண்டும் மலரும் கூட்டணி?

2020ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.
சுக்பீர் சிங் பாதல், மோடி
சுக்பீர் சிங் பாதல், மோடி
Published on

பஞ்சாபில் முக்கிய மாநில கட்சியாக விளங்கும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று முன் தினம் டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இதன் மறுநாள், அதாவது நேற்று, முக்கிய அரசியல் திருப்பமாகதொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமது கட்சி ஆதரவு அளிப்பதாக சுக்பீர் சிங் பாதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆதரவு

நேற்று சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சுக்பீர் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில்,

"நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைச் செயல்பாடுகளுக்கு அகாலி தளம் முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் நியாயமான முறையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.

அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% நாடாளுமன்றத் தொகுதிகளை உயர்த்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள யோசனையை அகாலி தளம் ஆதரிக்கிறது.

சீக்கிய குருமார்களின் போதனைகளைப் பின்பற்றி, பெண்களுக்குச் சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் உடனடி இடஒதுக்கீடு வழங்குவதை அகாலி தளம் வலியுறுத்துகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்டி வரும் நிலையில், அகாலி தளத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு தேசிய அரசியலிலும், பஞ்சாப் மாநில அரசியலிலும் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. சிரோமணி அகாலி தளம் வசம் 1 எம்.பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி

2020ஆம் ஆண்டு மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேறியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் இரு பழைய தோழமைகளும் மீண்டும் இணைய வேண்டிய சூழல் நிலவுவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

பிரதமர் மோடியுடன் சுக்பீர் சிங் பாதல் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக அமைந்ததாகவும், பஞ்சாபின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டணி புதுப்பிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இதன் மூலம் பஞ்சாபில் பாஜக - அகாலி தளம் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com