

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ஏர் இந்தியா AI 171 விமான விபத்து நடந்து கடந்த 12-ம் தேதி ஓராண்டு நிறைவடைந்தது.
இதையொட்டி, இந்த விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நெறிமுறைகளின்படி விசாரணை நடப்பதால், அறிக்கையை அவசரமாக வெளியிட முடியாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேச விதிகளின்படி விசாரணை..
விபத்தின் ஓராண்டு நினைவையொட்டி பேசிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்து குறித்த விசாரணை மிகவும் தீவிரமான முறையில், சர்வதேச மற்றும் தேசிய நெறிமுறைகளைப் பின்பற்றி துல்லியமாக நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் நாங்கள் எந்தவித அவசரமும் காட்ட விரும்பவில்லை, மிக விரைவில் முழுமையான மற்றும் வெளிப்படையான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.
ஏர் இந்தியாவின் 'பாதுகாப்பு நிறுத்தம்'..
இந்த விபத்து நடந்ததைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டில் ஏர் இந்தியா நிறுவனம் பல அதிரடி பாதுகாப்பு மாற்றங்களைச் செய்துள்ளது. விபத்து நடந்த சில நாட்களிலேயே, சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் மேற்பார்வையில் தனது போயிங் 787-8 மற்றும் 787-9 ரக விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி தீவிர சோதனை நடத்தியது.
மேலும் போயிங் 737 மற்றும் 787-8 விமானங்களின் 'ஃபுயல் கன்ட்ரோல் ஸ்விட்ச்' அமைப்புகளும் முழுமையாகச் சோதிக்கப்பட்டன. இந்தச் சோதனைகளில் எந்தக் குறைபாடும் கண்டறியப்படவில்லை.
விமானங்களின் செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பு (87% ஆக உயர்வு)..
கடந்த ஓராண்டில் ஏர் இந்தியா நிறுவனம் தனது போயிங் 787 மற்றும் 777 ரக விமானங்களின் நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்புத் திறனை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு 75% ஆக இருந்த விமான பராமரிப்புத் திட்டங்களின் செயல்பாடு, இந்த ஆண்டு 87% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பராமரிப்புக்கான சிறப்பு முயற்சிகளின் எண்ணிக்கை 36-லிருந்து 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு 'Wellness.AI' மனநல ஆதரவு..
விமான விபத்திற்குப் பிறகு ஊழியர்களின் மன உளைச்சலைப் போக்க ஏர் இந்தியா நிறுவனம் 'Wellness.AI' என்ற பிரத்யேக மனநல ஆதரவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இதற்காக 265 உளவியலாளர்கள் கொண்ட ஒரு பெரிய குழு நியமிக்கப்பட்டு, விமான ஓட்டிகள், பணிப்பெண்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ரகசிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வரை இலவசமாக மனநல ஆலோசனை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேகத்தை விட துல்லியமான காரணத்தைக் கண்டறிவதே முக்கியம் என்பதால், மத்திய அரசு இந்த விசாரணையை சர்வதேச தரத்தில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.