

கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா 171 விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானம் பைரம்ஜி ஜூஜூபாய் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கீழே விழுந்தபோது தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் சிக்கி உயிரிழந்தார். விமான தளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் இந்த விபத்து நிகழ்ந்தது.
விமானத்தில் பயணித்த டாமன் டையூ-வை சேர்ந்த விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
அப்போது டி ஷர்ட்டில் இரத்தக் கறையோடு, செல்போன் பேசிக்கொண்டு விஸ்வேஷ் குமார் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகின.
இதையடுத்து டாடா குழுமத்தால் நிறுவப்பட்ட ஏஐ-171 நினைவு மற்றும் நலவாழ்வு அறக்கட்டளை, விபத்தில் உறவினர்களை இழந்த ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் விபத்து குறித்து பேசிய விஸ்வேஷ் குமார், “ஓராண்டிற்கு பிறகும் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மிகவும் மோசமான நினைவுகள் என்னை சிரமப்படுத்துகிறது.
நான் தப்பி பிழைத்திருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், மூடிய கதவுகளுக்கு பின்னால் தொடரும் சவால்களை அவர்கள் எப்போதும் பார்ப்பதில்லை.
நான் என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும், என் குடும்பத்தை முடிந்தவரை ஆதரிக்கவும் முயன்று கொண்டிருக்கிறேன்”என்று கூறினார்.