

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் வருகிற 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் வீட்டுக்கு அருகே செயல்படும் மாவு ஆலையில் வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை, தேயிலை உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய 30 தொகுப்பு பைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த தொகுப்பு பையின் மேல் பகுதியில் ராகுல் காந்தி-பிரியங்கா ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவகுமார் ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தன. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, அந்த நேரத்தில் கொண்டு வரப்பட்ட உணவு தொகுப்பு என்று காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.