

இந்தியக் கடற்படையில் கடந்த 1987 ஆம் ஆண்டு அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த 2025 ஆம் ஆண்டு மேற்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற அவர், ஏவுகணை கப்பல்களான ஐஎன்எஸ் வித்யுத், ஐஎன்எஸ் வினாஷ் மற்றும் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா உள்ளிட்ட பல கப்பல்களுக்கு தலைமை தாங்கினார்.
ரியர் அட்மிரலாகப் பதவி உயர்வு பெற்ற அவர், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைத் தளத்தில் தலைமைப் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார்.
மேற்கு கடற்படைக்கு தலைமை தாங்கிய அவர், கடலோர பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் கொடி அதிகாரியாகவும், இந்திய அரசாங்கத்தின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆலோசராகவும் பணியாற்றினார்.
இந்திய கடற்படைத் தளபதியாக பதவி வகித்து வந்த அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தேவைப்படும் இடங்களில் நாட்டின் நலன்களைப் பாதுகாக்க இந்தியக் கடற்படை விழிப்புடன் உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பேணுவதற்காக, இந்தியக் கடற்படை உயர்மட்ட செயல்பாட்டுத் தயார்நிலையையும் போர்த்திறனையும் பராமரிப்பதை உறுதி செய்வதே எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
இந்தியக் கடற்படை நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான வலுவான பாதையில் உள்ளது” என்றும் அட்மிரல் சுவாமிநாதன் கூறினார்.