

சிக்கிமின் நாம்ச்சி மாவட்டத்தில், மீத்தேன் வாயு கசிவு என சந்தேகிக்கப்படும் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
NHPC சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சமும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் அறிவித்தார்.
கருணைத் தொகை:
பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்ததோடு, மத்திய அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவருக்கு உறுதியளித்தார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் கருணைத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு சற்று பின்னர், சமர்துங்கில் உள்ள NHPC டீஸ்டா ஆறாம் கட்ட நீர்மின் திட்டத்தின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள், சில திட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 25 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
"சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 25 பேரில், 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது," என நாம்ச்சி காவல் கண்காணிப்பாளர் (SP) சோனம் டி பூட்டியா தெரிவித்தார்.
சிறப்புக் குழு:
பல்வேறு முகமைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதுவரை ஏழு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
NHPC அறிக்கையின்படி, பாறைகளுக்குள் சிக்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் மீத்தேன் வாயு திடீரென வெளியேறியதால், அடர்த்தியான புகையும் நச்சு வாயுக்களும் உருவாகி இந்த வெடிப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கு காரணமான மீத்தேன் வாயு வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
முன்னதாக ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நிலைமையை ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அவர்கள் களத்தில் இருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி, காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ பராமரிப்பும் ஆதரவும் கிடைப்பதை உறுதிசெய்ய, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு, என்.எச்.பி.சி தலைவரும் நிர்வாக இயக்குனருமான பூபேந்தர் குப்தாவிற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.
மௌன அஞ்சலி:
இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக ரங்போவில் ஒரு பிரத்யேக அமைப்பை நிறுவுமாறும், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறிப்பாக பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் ஆளுநரும் முதலமைச்சரும் நாம்ச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிக்கிம் சட்டமன்றம் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இச்சம்பவம் தொடர்பாக தன்னிடம் பேசியதாக முதலமைச்சர் அவையில் தெரிவித்தார்.