

கடந்த 2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த இறப்புகளில் 86%-க்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளில் நடைபெற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில் 8,234 பேரும், 2022-ல் 6,614 பேரும், 2023-ல் 7,291பேரும், 2024-ல் 7,747 பேரும், 2025-ல் 7,854 பேரும் உயிரிழந்துள்ளனர். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 12,380, சவூதி அரேபியாவில் 11,757 இறப்பு எண்ணிக்கையும் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த வரிசையில் குவைத் (3,890), ஓமன் (2,821), மலேசியா (1,915) மற்றும் கத்தார் (1,760) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மக்களிடம் இருந்து வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் 80,985 புகார்களைப் பெற்றுள்ளன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 16,965 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து குவைத் (15,234), ஓமன் (13,295) மற்றும் சவூதி அரேபியா (12,988) போன்ற நாடுகள் உள்ளன.
இந்த தரவுகளின்படி வளைகுடா நாடுகளில் மட்டும் ஒரு நாளைக்கு 18 தொழிலாளர்கள் இறக்கின்றனர். வளைகுடாப் பகுதிக்கு வெளியே, மலேசியா மற்றும் மாலத்தீவிலும் கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. அங்கு மலேசியா, மாலத்தீவு முறையே 8,333 புகார்களும், 2,981 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மியான்மரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழிலாளர் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் 2,548 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,863 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
2025-ல் மட்டும் 22,479 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது 2021-ல் பதிவான 11,632 புகார்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துபூர்வமாக அளித்தப் பதிலில் இந்த தரவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
அதாவது 2012 முதல் 2018-ஆம் ஆண்டு பாதி வரை, வளைகுடா நாடுகளில் நாளொன்றுக்கு சராசரியாக 10 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
CHRI அமைப்பின் அந்த ஆய்வின்படி, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் மட்டும் இந்த ஆறரை ஆண்டுகளில் குறைந்தது 24,570 இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்?
வேலை வாங்கிவிட்டு சம்பளம் தராதது, தாமதமாக தருவது போன்றவை முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது.
பாஸ்போர்ட்டுகளை முதலாளிகள் வைத்திருப்பது, விடுப்பு வழங்க மறுப்பது, கூடுதல் ஊதியம் இன்றி நீண்ட நேரம் வேலை வாங்குவது, திடீரென நிறுவனங்கள் மூடப்படுவதால் ஏற்படும் வேலையின்மை போன்றவையும் இந்த புகார்களில் அடங்கும்.