

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிஷ்ட்வாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.