CBSE இணையதளக் குளறுபடிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த 19 வயது இளைஞருக்கு ஐஐடி கான்பூரில் வேலை!

"சிறு வயது முதலே கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட நிசர்க், 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே பல ஹேக்கிங் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்."
19-year-old youth who exposed CBSE website glitches gets a job at IIT Kanpur
Published on

மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் போர்ட்டலில் இருந்த மிக முக்கியமான பாதுகாப்புப் பிழைகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டிய நிசர்க் அதிகாரி என்ற 19 வயது இளைஞரை, ஐஐடி கான்பூர் தனது சைபர் பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தியுள்ளது.

சமீபத்தில் தனது 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த இந்த இளைஞர், ஐஐடி கான்பூரின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான C3iHub-ல் 'ஓப்பன் சோர்ஸ் இன்டெலிஜென்ஸ் மற்றும் த்ரெட் இன்டெலிஜென்ஸ் இன்ஜினியராக' ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க பயோடேட்டா தேவைப்படும். ஆனால் நிசர்க், சிபிஎஸ்இ இணையதளத்தில் தான் கண்டறிந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எழுதிய ஒரு 'ப்ளாக் போஸ்ட் தான் அவருக்கு இந்த வேலையைப் பெற்றுத் தந்துள்ளது.

நிசர்க்கின் அந்தப் பதிவைப் படித்த ஐஐடி கான்பூர் இயக்குநர் மணீந்திர அகர்வால், அவரை நேரில் அழைத்து இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். ஐஐடி கான்பூர் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் பொறியாளராகப் பணியமர்த்தப்பட்டவர்களில் நிசர்க்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ-யின் போர்ட்டலில் 'டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷனை' முழுமையாகப் புறக்கணித்து, முதன்மை பாஸ்வோர்டை எளிய உரையாக (Plain Text) சேமித்து வைத்திருந்தது உட்பட 5 முக்கியமான பாதுகாப்புப் பிழைகளை நிசர்க் கண்டறிந்து, இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In-க்கு கடந்த பிப்ரவரி மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சிறு வயது முதலே கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட நிசர்க், 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே பல ஹேக்கிங் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போதைக்கு அவர் கல்லூரிப் படிப்பில் சேர திட்டமிடவில்லை என்றும், ஸ்டார்ட்-அப் மற்றும் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com