ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்.. EPF ஊதிய உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு நிறுவனத்தின் 8.33% பங்களிப்புடன் மத்திய அரசும் 1.16% தொகையை வழங்கி வருகிறது.
EPFO
EPFO
Published on

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)இன் கீழ், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் (EPF) பணம் பிடித்தத்திற்கான அடிப்படை சம்பள உச்சவரம்பை மாதம் ரூ.15,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் பெற்ற பிறகு இது அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரம்பு உயர்வு

2014இல் இந்த சம்பள வரம்பு ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது.

இதன்படி, தற்போது மாதம் ரூ.15,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே PF பிடித்தம் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின், இந்த வரம்பை ரூ.30,000 ஆக உயர்த்த ஆலோசிக்கப்பட்டு நிலையில் தற்போது ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறை என்ன?

தற்போது, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15,000 மற்றும் அதற்கும் கீழ் இருந்தால் அந்த ஊழியர்கள் கட்டாயமாக EPF திட்டத்தில் சேர வேண்டும்.

இதன் மூலம் சம்பளத்தில் ஒரு தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் பணி ஓய்வின் போது மொத்த தொகையாக கிடைக்கும்.

இந்த வரம்பை 25,000 ரூபாயாக உயர்த்துவதால், மாத அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய் வரை கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு பிஎப் பிடித்தம் கட்டாயம் ஆகும்.

பயன் என்ன?

தனியார் துறையில் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அடிப்படை சம்பளம் வாங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் கட்டாய EPFO மற்றும் ஓய்வூதிய சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.

ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்கு நிறுவனத்தின் 8.33% பங்களிப்புடன் மத்திய அரசும் 1.16% தொகையை வழங்கி வருகிறது.

இந்த வரம்பு உயர்வால் அரசுக்கு நிதிப் சுமை அதிகரிக்கும். 2026-27 நிதியாண்டில் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.11,144 கோடி ஒதுக்கியுள்ளது.

20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு பிஎப் பங்களிப்பு கட்டாயமாகும். 20க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் விருப்பத்தின்பேரில் EPFO தளத்தில் பதிவு செய்து பிஎப் திட்டத்தில் ஊழியர்களை இணைக்கலாம்

X

Maalai Malar
www.maalaimalar.com