உங்களுக்காக கை தட்டுங்கள்!

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே திறமையானவன்தான். நிறைய விஷயங்களில் நமக்கு திறமை இருந்தும் நம்மால் அதை நோக்கிப் போகவும், வெற்றி பெறவும் முடியாமல் போகக் காரணம் திட்டமிடலின்மைதான்.
உங்களுக்காக கை தட்டுங்கள்
உங்களுக்காக கை தட்டுங்கள்
Published on

“உங்களுக்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள்” அவ்வளவுதான்.

எல்லாமே நமக்கு தெரியும். அதான் தெரியுமே! என்ற மனநிலையில், எதைப் பற்றியும், நாம் ஆழமாக யோசிப்பதில்லை. அதற்கான திட்டங்களில் அக்கறை காட்டுவதுமில்லை. நிறையப் பேருக்கு ‘நமக்கு என்ன தேவை?’என்பதே தெரிவதில்லை,
யோசித்துப் பாருங்களேன். இன்றைக்கு தோராயமாக உங்களுக்கு 30 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். 60 வயதில் நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்?

அப்போது என்ன தேவை? அந்த வயதில் என்னென்ன வசதிகள் வேண்டும்? சமூகத்தில் எந்த நிலையில் இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் தொழிலில் எந்த உயரத்தில் இருக்க விரும்புகிறீர்கள்..? இவை பற்றியெல்லாம் யோசித்து, திட்டமிட்டது உண்டா..?

திட்டமிடாத பணிகளை எப்போதுமே செயல்படுத்த முடியாது. எதற்குமே ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுமே திறமையானவன்தான். நிறைய விஷயங்களில் நமக்கு திறமை இருந்தும் நம்மால் அதை நோக்கிப் போகவும், வெற்றி பெறவும் முடியாமல் போகக் காரணம் திட்டமிடலின்மைதான்.

ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓடுகிற வயதில் உட்கார்ந்து கொண்டிருந்தால், உட்கார வேண்டிய வயதில் ஒட வேண்டி இருக்கும்.

இருக்கிற வேலையை உருப்படியாகச் செய்து நிம்மதியாக இருப்போம் என்ற எண்ணம், வளர்ச்சியைத் தராது.

இந்த வாழ்க்கை நாம கேட்டா கிடைச்சது..? எல்லாம் தானே வரும் சார், நம்ம எதிர்காலமும் சூப்பரா இருக்கும் சார்’ என்று தோன்றுகிறதா..? வாழ்க்கை, வளத்தைத் தானே தராது. அது ஒரு வழிகாட்டி.

நம்பிக்கையோடு செயல்படும்போது கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் நமது கையில் தான் இருக்கிறது.

வாழ்க்கை மேல் பாரத்தைப் போடுவதன் மூலம் நீங்கள், உங்கள் வயதைக் கடத்துகிறீர்கள் என்பதே பொருள்.

ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டீர்களானால், வெற்றி பெறுவதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும். தெளிவு இல்லையென்றால், பிறரது வளர்ச்சிக்காக கை தட்டிக்கொண்டே இருப்போம். அடுத்தவருக்கு பயன்பட்டுக் கொண்டே இருப்போம். நமக்குப் பலன் ஒன்றும் இருக்காது.

நமக்கு கனவு இல்லையென்றால், நாம் அடுத்தவர் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். உங்கள் கனவுக்கு உழைக்க ஆளைத் தேடுங்கள்.

சினிமாவுக்குப் போகிறோம். டி.வி-யில் சீரியல் பார்க்கிறோம். இதைத் தவிர கிரிக்கெட், புட்பால் எல்லாமே பார்க்கிறோம். கை தட்டுகிறோம். நீங்கள் யாருக்காக கை தட்டுகிறீர்களோ, அவர் சம்பாதிக்கிறார். நீங்கள் கை தட்ட தட்ட அவரது பேங்க் பேலன்ஸ் உயர்ந்து கொண்டே போகிறது.

உங்களது 50ஆவது வயதில், பையனின் உயர் படிப்புக்குப் பணம் தேவைப்படும், பெண்ணின் கல்யாணத்திற்கு பணம் தேவைப்படும், கடன் வாங்க வேண்டியிருக்கும்.

அப்போது, ‘அடடா பணத்தை சம்பாதிக்காமல், சேர்த்து வைக்காமல், இப்படி வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே! என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும், அப்போது புதிய யோசனைகளும் திட்டங்களும் கூட வரலாம். ஆனால், அவற்றை எல்லாம் செயல்படுத்த உடல் வலிமையும், வாய்ப்புகளும் இருக்காது.

தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் 50 வயதிற்கு மேல் நம்மால் ஓட முடியாது, உத்தரவாதம் இல்லாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தூய்மை இல்லாத தண்ணீர், காற்று, உணவு என்ற மாசுள்ள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மூட்டு வலி, சர்க்கரை வியாதி எனப் பல பிரச்சினைகள் 50 வயதிலேயே வந்து விடுகின்றன. அதற்குள்ளாக உங்கள் தேவை என்ன என்பதைத் தெரிந்து அதை நோக்கி, ஓட வேண்டும்.

முன்னேற வேண்டும் என்று ஆர்வம் காட்டினால், ‘கை தட்டுகிற வேலை’ தானே குறைந்து விடும். ‘எனக்கு நிறைய வேலை இருக்குப்பா, இதற்கெல்லாம் நேரம் கிடையாது!’ என்று கூறி, வெட்டி அரட்டைகள், வீண் பாராட்டு விழாக்களில் இருந்து விலகி விடுவீர்கள்.

ஆரம்பத்தில் சொன்னதுபோல, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு முதலில் எங்கே போக வேண்டும் என்பதற்கான தெளிவு வேண்டும். பிறகு தெளிவாகத் திட்டமிட்டு அதை நோக்கி உழைக்க வேண்டும். திட்டமிட்டு உழைத்தால், வெற்றி நிச்சயம்.
 

- இராம்குமார் சிங்காரம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com