அசோக்குமாருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அன்புசெழியனின் பட நிறுவனம் விளக்கம்

அசோக்குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அசோக்குமாருக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அன்புசெழியனின் பட நிறுவனம் விளக்கம்
Published on

பட அதிபர் அசோக்குமாரின் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மதுரை பைனான்சியர் அன்புசெழியனின் பட நிறுவனமான “கோபுரம் பிலிம்ஸ்” சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் என்பவர், நடிகர் சசிக்குமாரின் உதவியாளர். நாங்கள் சசிக்குமாரிடம் தான் படம் தயாரிப்பதற்காக வியாபார தொடர்பு இருந்தது. அவர் தான் பட தயாரிப்புக்காக எங்களிடம் பணம் பெற்றுள்ளார்.

அசோக்குமார் என்பவருக்கு நாங்கள் எந்த பண வரவு, செலவும் செய்யவில்லை. எங்களிடம் எந்தவிதமான வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை பற்றி கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

எங்களிடம் பண உதவி பெற்று சினிமா எடுக்கிறார்கள். அந்த பணத்தை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வது வழக்கம். இது தான் சினிமாவில் இருக்கும் நடைமுறை.

சிலர் எந்த முதலீடும் இல்லாமல் சினிமா தயாரிக்க வருகிறார்கள். எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால் சினிமா தயாரிக்காமல் வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள்.

இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவின் பைனான்ஸ் தொழில் செய்கிறோம். எங்கள் மேல் எந்த புகாரும் இல்லை. அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படும் கருத்தில் எள்ளளவும் உண்மை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com