உரு

விக்கி ஆனந்த் இயக்கத்தில் கலையரசன் - தன்ஷினா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உரு' படத்தின் விமர்சனம்.
உரு
Published on

இந்நிலையில், கலையரசனின் கதைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வித்தியாசமாக இல்லை. காதல், செண்டிமண்ட் என அரைத்த மாவையே அரைக்காமல் புதுமையாக யோசித்து எழுதும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். தன்ஷிகாவும் கதை எழுதுவதை விட்டுவிட்டு படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்கும்படி கலையிடம் கூறிவருகிறாள்.

ஆனால் கதை எழுதுவதில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் கலையரசனுக்கு, ஒரு கட்டத்தில் த்ரில்லர் கதை எழுதுவதற்கான துணுக்கு ஒன்று கிடைக்கிறது. எப்போதுமே டிரெண்ட் மாறாத ஒரே எமோஷன் "பயம்" என்பதால் ஒரு வித்தியாசமான கதையை எழுத முடிவு செய்து மேகமலைக்கு செல்கிறார். மேகமலை காட்டில் அமைதியான இடத்தில் இருக்கும் ஒரு தனி வீட்டிற்கு சென்று கதை எழுத ஆரம்பிக்கிறார்.

அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவருக்கு நிகழ ஆரம்பிக்கின்றன. அதுவும், கலையரசன் என்ன எழுதுகிறாரோ, அது உண்மையாகவே நடக்க ஆரம்பிக்கிறது. தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கும் கலையரசனுக்கு, தான் எழுதும் கதை அப்படியே நடப்பது குறித்து வியப்பும், பயமும் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரது கதையில் வரும் சீரியல் கில்லர், கலையரசனையே கொல்ல வருகிறான்.

அந்த சீரியல் கில்லர் யார்? கலையரசன் எழுதும் கதை அப்படியே நடப்பதற்கான காரணம் என்ன? அந்த கில்லர் ஏன் கலையரசனை கொல்ல வருகிறான்? அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கலையரசன், இப்படத்திலும் அதனை பின்பற்றி இருக்கிறார். இப்படத்தில் ஒரு எழுத்தாளருக்கு தேவையான குணநலன்களுடன் வலம் வரும் கலையரசனின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக மேகமலையில் நடக்கும் சம்பவங்களில் அவர் அனுபவிக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பயம், ஆச்சரியம், வியப்பு என மாறி மாறி நடித்து ரசிக்க வைக்கிறார்.

தனது முதல் படத்திலேயே பேசப்படும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த தன்ஷிகா, தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தன்ஷிகாவின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

மைம் கோபிக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயபாலன் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதையை முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்த்துக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். உரு வழக்கமாக வரும் ஹாரர் படங்களை போல் இல்லாமல், ஒரு புதுமையான திரைக்கதையில் விறுவிறுப்புடன் இயக்கி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் க்ளைமேக்சில் மட்டும் இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். சொல்ல வருவதை அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எளிதாக தெரிவிக்காமல் சுற்றி வளைத்து சொல்லி இருப்பது, அனைவராலும் உள்வாங்கிக் கொள்ளும்படியாக இல்லை. மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.  

பின்னணி இசையை பொறுத்த வரை ஜோகன் ஷேவனேஷ் மிரட்டியிருக்கிறார். பேய் படம் இல்லை என்றாலும், த்ரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. காடுகளில் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மெனக்கிட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com