

அலைகள் ஓய்வதில்லை, ரங்கா, மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை, கொம்பேறி மூக்கன் உள்பட பல படங்களில் தியாகராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்து இருந்தார்.
தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரித்திகா மேனன் முக நூலில் கூறினார். கோவையில் படப்பிடிப்பு நடந்த போது தியாகராஜன் தன்னுடைய அறைக் கதவை தட்டியதாகவும் தான் திறக்க வில்லை என்றும் பதிவிட்டு இருந்தார்.
பிரித்திகாவின் இந்த குற்றசாட்டை தியாகராஜன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிரித்திகாமேனன் நான் இயக்கிய பொன்னர் சங்கர் படத்தில் அப்ரெசண்டீசாக 3, 4 நாட்கள் புகைப்படம் எடுக்கும் பணியை செய்தார். அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கதவை யாரோ தட்டியதாகவும் அது நான் தான் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இது யூகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
என் மீது வீண்பழி சுமத்தி களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் அவர் மீது வழக்கு தொடர உள்ளேன். அது இதுபோல பொய்க் குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் உண்மை தெரிய வரும். மீ டூ என்பது பெண்களுக்கு அவசியமான இயக்கம். அதை இதுபோன்று தவறாக பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.