

டிஜிட்டல் முறையில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும். அது வரை புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை குறைப்பதற்காக, டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இதனால், தியேட்டர்களில் கூட்டம் குறைந்தது. இந்த நிலையில் கேளிக்கை வரி குறைப்பு உள்பட சில கோரிக்கைகளை முன் வைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் செய்வதாக அறிவித்தனர். சென்னை தியேட்டர்கள் இதில் பங்கேற்கவில்லை.
தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று அனைத்து தியேட்டர்களும் திறக்கப்பட்டன. இதில் பிரபல நடிகர்களின் பழைய படங்கள், டப்பிங் படங்கள், ஆங்கிலம் மற்றும் பிறமொழி படங்கள் திரையிடப்படுகின்றன.
இன்று ஒரு சில தியேட்டர்களில் காலை காட்சிகள் நடந்தன. ஆனால், கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. புதிய படங்கள் திரைக்கு வராததால் ரசிகர்கள் தியேட்டருக்கு காலை காட்சியில் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
பகல் காட்சிக்கும் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்று தியேட்டர்கள் தரப்பில் கூறப்பட்டது. இரவு காட்சிக்கும் டிக்கெட் முன்பதிவு குறைவாகவே இருந்தது. எனவே புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் வரை தியேட்டர்களுக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் வர வாய்ப்பு இல்லை.
எனவே, தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். #TheatresStrike