நேற்றுகூட பேசினார்... சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னேன் - கே.வி.ஆனந்த் குறித்து சிம்பு உருக்கம்

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு, கே.வி.ஆனந்த்
சிம்பு, கே.வி.ஆனந்த்
Published on

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com